TTV Dhinakaran campaign: ஈரோட்டில் வரும் 12ம் தேதி முதல் டிடிவி தினகரன் பிரச்சாரம்

ஈரோடு: AMMK general secretary TTV Dhinakaran is campaigning in Erode East constituency from 12th. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 12ம் தேதி முதல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சண்முகவேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு தேர்தல் களம் புதிது அல்ல. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம்.

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் மக்களை சந்தித்து ஆளும் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை எடுத்துரைப்போம். மேலும் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு ஆகிய மக்களின் அடிப்படை பிரச்சனையை முன்வைத்து களம் காணுவோம்.


இதற்கு முந்தைய தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் எங்களுக்கான தேர்தலாகவே பார்க்கிறோம். டி டிவி தினகரன் மக்களை நேரடியாகவும், நியாயமான முறையிலும் சந்தித்து வாக்கு சேகரிக்க கூறியுள்ளார். எங்கள் சார்பில் 29 வயது இளைஞரை நாங்கள் நிறுத்தி உள்ளோம். அதிமுகவில் இலையைப் பிடிக்க இரு அணிகளிடையே போட்டி நடந்து வருகிறது. நாங்கள் தனி கட்சியாக நின்று செயல்படுகிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிறகு தற்போது 2வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த்தை ஆதரித்து பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 12ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஈரோட்டில் பல்வேறு பரிமாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்துள்ளது; இது கண்டனத்திற்குரியது.

பணப் பட்டுவாடா குறித்து நாங்களும் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிப்போம். மத்திய, மாநில தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணப் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராணுவத்தை கொண்டு வந்து பணம் விநியோகிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.