Siddaramaiah : 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல் : எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா

பெங்களூரு : Opposition Leader Siddaramaiah : 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்றும், கட்சியில் உள்ள‌ மற்றவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

பெங்களூரின் பஸ்திபுரா லேஅவுட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த‌ நிகழ்ச்சியை தொட‌க்கி வைத்து பேசியது: ஆகஸ்ட் 3-ம் தேதி தாவணகெரேயில் நடைபெறும் எனது 75வது பிறந்தநாள் விழாவை சித்தராமையாவின் விழா என ஆர்எஸ்எஸ் பெயரிட்டுள்ளது. இது சாதாரண‌ விழா அல்ல. எனது 75-வது பவளவிழா. இதில் பங்கேற்க‌ அனைவரையும் வருமாறு அழைகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தான் போட்டியிடும் கடைசித் தேர்தல்.கட்சியில் உள்ள‌ மற்றவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என்றார்.

2013- ஆம் ஆண்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த சித்தராமையா, 2018 சட்டமன்றத் தேர்தலில் பாதாமி மற்றும் சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார், அப்போது இதுவே தனது கடைசித் தேர்தல் என்று மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் அந்த தேர்தலில் பாதாமியில் வெற்றி பெற்று, சாமுண்டேஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 2013-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சித்தராமையா மீண்டும் அந்த பழைய பல்லவியை பாடியுள்ளார்.

இதற்கு காரணம் தற்போது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டி.கே.சிவக்குமார் உள்ளார். அவர் எங்கே தனது மீண்டும் முதல்வர் ஆகும் கனவிற்கு திரைபோட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் உள்ள சித்தராமையா, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்று கூறி வருகிறார். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 2 பிரிவாக செயல்படுவதாக கட்சியின் மேலிடத்திற்கு சென்ற தகவலையடுத்து, டி.கே.சிவகுமாரும், சித்தராமையாவும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதனையடுத்து சித்தராமையா, வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு டி.கே.சிவகுமாரை அழைத்து, இருவரும் சேர்ந்து சிற்றுண்டி அருந்தினர்.

கட்சியின் மேலிடக் கட்டளையை ஏற்று இருவரும் ஒற்றுமையாக உள்ளது போல போட்டோவுக்கு போஸ் தருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், அதற்கு பிறகும் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜகவினர் கிண்டல் செய்கின்றனர்.