சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு (Kamal haasan support for Congress) அடுத்த மாதம் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே போன்று அ.தி.மு.க. சார்பில் வேட்பாளருக்கான விருப்பமனு வாங்கப்பட்டு வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். இவ்வாறு கூறினார். கமல்ஹாசன் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு மூலம் நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.