Bjp Complains Against Mlas: தமிழக ஆளுநரை பயமுறுத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் மீது பா.ஜ.க. புகார்

சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க. செயலர் அஸ்வத்தாமன் (Bjp Complains Against Mlas) நேற்று (ஜனவரி 9) ஆன்லைன் வாயிலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளது தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை நேற்று கூடியது அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக வெளியேறு, வெளியேறு என்ற கோஷத்தையும் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்றி கூறியதற்காகவும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆளுநரை மிரட்டியதாக பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வத்தாமன் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றிபோது சட்டமன்ற உறுப்பினர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பெரும் கூச்சலிட்டுள்ளனர்.

அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஆளுநரை ஜனநாயக கடமையாற்ற விடாமல் மிரட்டும் தொணியில் செயல்பட்டுள்ளனர். ஆளுநரை பயமுறுத்தி, பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தில் சைகை காட்டியுள்ளனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே கூச்சலிட்டு மிரட்டும் தொணியில் செயல்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.