Thunivu, Varisu banned on internet: துணிவு, வாரிசு இணையத்தில் வெளியிட தடை: உயர்நீதிமன்றம்

சென்னை: The Madras High Court has banned the illegal publication of Thunivu and Varisu movies on internet. துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையத்தளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு மற்றும் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த 2 படங்களையும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்கள் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி.சரவணன், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.