AIADMK Protest: மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை: AIADMK Massive Protest: மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து வரும் 25ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் (DMK Government) திமுக அரசின் ஆட்சியாளர்கள், மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வன வாசம்” என்று காராகிருஹத்திற்குள் அடைக்கும் செயல் ஒன்றையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் இந்த திமுக அரசு, மக்களைக் காக்கும் கடமையில் இருந்து தவறுகிறது.

நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (Financial Statement) திமுக அரசு தாக்கல் செய்யும்போது, வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு (Law and order disorder), சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது. மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளான (Essential requirements) அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றின் இமாலய விலை உயர்வுகளால் பரிதவிக்கும் அப்பாவி மக்களை, இந்தக் கொடுங்கோல் ஆட்சியின் கொடூரக் கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் வரும் 25ம் தேதி , காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.