AIADMK General Council is valid: எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: Chennai High Court orders that July 11 General Council is valid. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் விசாரிக்கபட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண் உள்ளிட்டோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில்,வழக்கின் தீர்ப்பு இன்று காலை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. அந்த உத்தரவில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வாயிலில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கமிட்டனர்.