A Defamation Case Has Been Filed: ஆளுநரை விமர்சித்த தி.மு.க. பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த தி.மு.க. தலைமை (A Defamation Case Has Been Filed) கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமின்றி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றியபோது அவருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். அது மட்டுமின்றி மிரட்டல் விட்டும், கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய தண்டனை சட்டம் பிரிவில் நடவடிக்கை எடுக்க கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் தரக்குறைவாக பேசியதால், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை துணை செயலாளர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் செயலாளர் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.