Rahul Narwekar : மகாராஷ்டிரா மாநில புதிய சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு

Image credit : Twitter

மும்பை: New Speaker Rahul Narwekar :மகாராஷ்டிரா மாநில புதிய சட்டப்பேரவைத் தலைவராக பாஜக கூட்டணியைச் சேர்ந்த 45 வயது ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனை கட்சி சார்பில் முதல்வர் பதவி வகித்த உத்தவ் தாக்கரே, அண்மையில் அப்பதவியில் இருந்து விலகியதையடுத்து, சிவசேனை கட்சியில் அதிருப்தி அடைந்த போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டே, பாஜக கூட்டணி உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு திங்கள்கிழமை (ஜூலை 4) பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் நானா படோலா விலகியதால் கடந்த ஒரு ஆண்டாக காலியாக இருந்த சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த ராகுல்நர்வேகர், சிவசேனையைச் சேர்ந்த ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பில் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராஜன் சால்வி தோல்வி அடைந்தார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய நானா படோலே ராஜினாமா செய்ததால், ஒரு வருடத்திற்குப் பிறகு, சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019- ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்த ராகுல் நர்வேகர், அதற்கு முன்பு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கொலாபா தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளார். தொழில்ரிதியாக வழக்கறிஞரான அவர், சிவசேனையில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தலைமையிலான இளைஞர் பிரிவான யுவசேனாவின் செய்தித் தொடர்பாளராக உயர்ந்தார். 2014-இல் சிவசேனாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் மாவல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு, சிவசேனை கட்சி வேட்பாளரான ஸ்ரீரங்கஹ‌ப்பா பார்னேவிடம் தோல்வியடைந்தார்.

ராகுல் நர்வேகர் மகாராஷ்டிரா முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான‌ ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ஆவார்.