PM to dedicate 75 Digital Banking Units: வரும் 16ம் தேதி 75 டிஜிட்டல் வங்கி மையங்களை பிரமதமர் துவக்கிவைப்பு

புதுடெல்லி: PM to dedicate 75 Digital Banking Units across 75 districts to the Nation on 16th October. நாடுமுழுவதும் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்களை வரும் 16-ந் தேதி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ந் தேதி காலை 11.00 மணியளவில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என 2022-23- மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் அறிவித்திருந்தார். டிஜிட்டல் வங்கி சேவையின் பயன்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டு இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்படுகிறது. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இதில் பங்கேற்கின்றன.

சேமிப்பு கணக்குகளை துவக்குவது, வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாஸ்புக்கில் பதிவு செய்வது, நிதி மாற்றம், வைப்பு தொகை முதலீடு, கடன் விண்ணப்பங்கள், காசோலைகளுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வங்கி கணக்கு விவரத்தை காணுதல், வரி, கட்டணங்கள் செலுத்துதல், வாரிசுதாரர் நியமனம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் வசதியான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கும். டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், டிஜிட்டல் நிதி அறிவை பரப்பி இணையவெளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி பாதுகாக்கும். டிஜிட்டல் வங்கி அலகுகள் வழங்கும் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு நிகழ் நேர உதவி வழங்க போதுமான டிஜிட்டல் ஏற்பாடுகளும் செய்யப்படும்.