Pondicherry University MOU with ACCA: லண்டன் கணக்காளர்கள் சங்கத்துடன் புதுவை பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: Pondicherry University inks MOU with Association of Chartered Certified Accountants (ACCA), London. லண்டனில் உள்ள பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்துடன் புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழக மேலாண்மைப்பள்ளி வணிகவியல் துறை, கற்றல் மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லண்டனில் உள்ள பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் (ஏசிசிஏ) சங்கத்துடன் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர், கே தரணிக்கரசு, தேசிய கல்விக்கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏசிசிஏ கல்வித்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

ஏசிசிஏ-வின் இந்தியாவிற்கான வர்த்தக மேம்பாட்டுத் தலைவர் குஷ் அஹூஜா, உலகளாவிய முதலீட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரு அமைப்புகளும் பாடத்திட்டத்தில் ஒப்புமை கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தினார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏசிசிஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் ஏ சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.