400 special buses run from Salem: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்திலிருந்து 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சேலம்: 400 special buses run from Salem on the occasion of Diwali. சேலம் மாவட்டத்திலிருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்.இரா.பொன்முடி தெரிவிக்கையில், சேலம் மண்டலத்தில் நகரம், புறநகரம், மலைப்பேருந்துகள் உட்பட 1047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 1900 வழித்தடப் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினசரி இயக்கப்படும் மொத்த கி.மீ 9.19 இலட்சமாகும். தினசரி 13.36 இலட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் 5.52 இலட்சம் மகளிரும் பயணம் செய்கின்றனர். 12.07.2021 முதல் இன்று வரை பயணித்த மொத்த மகளிர் 20.12 கோடி ஆகும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (சேலம்) வரை., சேலம் கோட்டம் மூலம் வருகின்ற 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூருக்கும், பெங்களூருவிலிருந்து சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு திரும்ப ஏதுவாக 24.10.2022 முதல் 26.10.2022 வரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி, ஒசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூவிற்க்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களின் நகரப்பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21.10.2022 முதல் 26.10.2022 வரை பயணிகள் தேவைக்கு ஏற்ப நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

21.10.2022 முதல் 26.10.2022 வரை அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்தைக் கண்காணிக்க மற்றும் சீர்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் அலுவலர்களுக்குப் பணி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. 21.10.2022 முதல் 26.10.2022 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சேலம், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.