Eknath shinde : மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் ஆதரவுடன் பதவி ஏற்கிறார்

மும்பை: Eknath shinde : மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் ஆதரவுடன் இரவு 7.30 மணியளவில் பதவி ஏற்க உள்ளார்.

சிவசேனை கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து சிவசேனை கட்சியைச் சேர்ந்த மற்றொருவரான ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனை பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனைச் சேர்ந்த ஏக்நாத்ஷிண்டே ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கக் கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், சிவசேனை கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக சிவசேனைச் சேர்ந்தவர்கள் பதவி ஏற்க உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியது: சிவசேனை கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட 50 பேர் எங்களுடன் உள்ளனர். அவர்கள் ஆதரவுடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளோம். என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க விடமாட்டேன். தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வர் ஆகாமல் பெரும்தன்மையுடன் என்னை முதல்வராக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். அவருக்கும் பிரதமர் மோடிக்கும், அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.