National Lists of Essential Medicines : அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: Dr Mansukh Mandaviya launches National Lists of Essential Medicines (NLEM) 2022: அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல்களை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கியபங்காற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகைசெய்கிறது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலை வெளியிட்டு அவர் பேசினார்.

இந்தப் பட்டியலில் கூடுதலாக 34 மருந்துகளுடன் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப் பிரிவுகளுக்கென இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அம்சங்களின் அடிப்படையில் மருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே தேசிய பட்டியலின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

இந்த பட்டியல் 1996ம் ஆண்டு முதல் முதலாக வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2003,2011,2015 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன்பு 3 முறை திருத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவிண் பவார், மத்திய சுகாதாரத்துறை செயலர் திரு ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.