CaneFest in Coimbatore: கோவையில் கரும்பு விவசாயிகளுக்கான கன்னல் விழா

கோவை: CaneFest on 23 & 24 September 2022 in Coimbatore: கோவையில் கரும்பு விவசாயிகளுக்கான 2 நாட்களுக்கு கன்னல் விழா நடைபெறுகிறது.

ஐசிஏஆர் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ஹேமபிரபா வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம், வரும் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அதன் வளாகத்தில் “கன்னல் விழா” என்னும் கரும்பு விவசாயிகளுக்கான திருவிழாவை நடத்தவுள்ளது.

110- ஆண்டுகள் பழமை வாய்ந்த கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சங்கத்துடன் (SSRD) இணைந்து, தென் மாநிலங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்காக இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

கன்னல் விழாவின் இரண்டாம் நாளான 24.9.2022 அன்று, “கரும்பு இயந்திர மயமாக்கல்”, குறித்த பயிலரங்கம் நடைபெறுகிறது .

இப்பயிலரங்கில் சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கரும்பு விவசாயிகள். இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர், ட்ரோன்களின் பயன்பாடு உள்ளிட்ட இயந்திரமயமாக்கல் முயற்சிகள் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

கன்னல் விழாவின் கண்காட்சியில் , பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் , தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளால் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. புதிய கரும்பு ரகங்கள் மற்றும் கரும்பு விவசாயத்தில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். கரும்பு சாகுபடி குறித்த முக்கியமான தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் விவசாயி- விஞ்ஞானி கலந்துரையாடல்களும் நடைபெறும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர், சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அரசுத் துறை அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

கன்னல் விழாவில் குழுக்களாக பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியினை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு http://sugarcane.icar.gov.in அல்லது http://caneinfo.icar.gov.in – ஐப் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளார்.