INS Sumeda Travel to Indonesia: இந்தோனேஷியாவிற்கு செல்லும் ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல்

சென்னை: INS Sumeda is a warship bound for Indonesia: நாட்டின் 75வது சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் இந்தோனேசியாவின் பாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் இந்திய கப்பற்படையின் தொலைதூர பணி ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுமேதா ஆகஸ்ட் 4 முதல் 6 வரை பாலியில் உள்ள தான்ஜூன் பினோவா துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த கப்பல் இந்திய சுதந்திர தினம் மற்றும் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டம் ஆகியவற்றுடன் இணையும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகர கடல்பகுதிக்கும் செல்லவிருக்கிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இந்தோனேஷிய கப்பற்படையுடன் இணைந்த செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பாலி பயணம் அமைந்துள்ளது.

மேலும் கப்பல் பாலியில் இருக்கும் போது இதன் மாலுமிகள் தொழில்முறை ரீதியான கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள். அந்நாட்டு கப்பல்களை பார்வையிடுவார்கள். இந்தோனேஷிய கப்பற்படை மாலுமிகளுடன் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்பார்கள்.

ஐஎன்எஸ் சுமேதா உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கப்பற்படையின் கடற்பகுதி ரோந்து கப்பலாகும். விசாகப்பட்டணத்தில் உள்ள இந்திய கப்பற்படையின் கிழக்கு பிரிவின் ஒரு பகுதியாக இந்த கப்பல் உள்ளது.

ஆவடி விமானப்படை நிலையத்தில் விமானப்படை துணைத் தளபதி எம்.வி.ராமாராவ் ஆய்வு (AIR VICE MARSHAL MV RAMA RAO VISITS AIR FORCE STATION AVADI) :

சென்னை: ஆவடி விமானப்படை தளத்தில் விமானப்படையின் துணைத் தளபதி எம்.வி.ராமாராவ் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானப்படை தலைமையகத்தின் முதுநிலை வான் மற்றும் நிர்வாகப் பிரிவு துணைத் தளபதி ஏர்வைஸ் மார்ஷல் எம்.வி.ராமாராவ், ஆவடி விமானப்படை நிலையத்தில் 03.08.2022 முதல் 05.08.2022 வரை ஆய்வு செய்தார். அவரை, ஆவடி விமானப்படை நிலையத்தின் ஏர் ஆபீசர் கமாண்டிங், ஏர் கமோடர் எஸ்.சிவகுமார் வரவேற்றார்.

ஆவடி விமானப்படை நிலையத்தின் பல்வேறு பணி தளங்கள், பிரிவுகளை பார்வையிட்ட ஏர் மார்ஷல், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளதா? என்பது குறித்தும் மதிப்பீடு செய்தார். தமது இந்த ஆய்வின்போது அங்கு பணியாற்றும் வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

பணியாளர்களின் தொழில் திறன் மற்றும் மனஉறுதியை பாராட்டிய ஏர்மார்ஷல், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மேம்பாட்டிற்காக, நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மனநிறைவு தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்து மேலாண்மை. பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சிப் பிரிவுகளில் தொழில் தரத்தை நிலைநாட்டி வருவதற்காக இந்த நிலையத்தின் அனைத்துப் பணியாளர்களையும் ஏர்மார்ஷல் பாராட்டினார்.