IIT Madras to collaborate with National Institute of Siddha: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் இணையும் ஐஐடி மெட்ராஸ்

சென்னை: IIT Madras to collaborate with National Institute of Siddha on Research & Clinical Studies: ஆராய்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட உள்ளது.

சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக விளங்கும் சென்னை சித்த மருத்துவ நிறுவனத்துடன் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் இணைந்து பயிற்சி, ஆராய்ச்சி, மருத்துவ ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, என்.ஐ.எஸ். இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி ஆகியோர் அண்மையில் இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரவீந்திர கெட்டு இந்நிகழ்வின் போது உடனிருந்தார்.

இந்த கூட்டுமுயற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி,”இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய பள்ளியாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்” எனக் குறிப்பிட்டார்.

கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல் [தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட], கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும்.

இந்த கூட்டாண்மை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துப் பேசிய தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் (NIS) இயக்குநர் டாக்டர் ஆர். மீனாகுமாரி,”நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸ்-உடன் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சித்த மருத்துவத்தில் உள்ள அளப்பரிய சிகிச்சைத் திறனைப் பரிமாறிக் கொள்ளவும், சித்த மருத்துவத்தின் தன்மைகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்தல், அதன் உயிரியக்க மூலக்கூறு மற்றும் செயல்படும் முறைகளை ஐஐடிஎம்-ன் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டறிதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை புதிய வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

டாக்டர் மீனாகுமாரி மேலும் கூறுகையில், “இரு கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் மூலிகை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய முக்கிய துறைகளில் மாணவர்களின் திறமை அதிகளவில் வெளிப்படும். பாரம்பரிய மருத்துவ முறைகளை தொழில்நுட்ப ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும். ஐஐடிஎம். உடன் இணைந்து பணியாற்றுவதால் இருதரப்பினரும் பயனடைவதுடன், சித்த மருத்துவ முறையையும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

சித்த மருத்துவ முறையின் வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்குவித்தல், சித்த மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சித்த மருத்துவ முறையில் முதுநிலைப் படிப்பை தரத்தை மேம்படுத்தவும், ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட நோய்களுக்கு சித்த மருந்துகளின் பயன்களை உறுதிப்படுத்தவும் என்.ஐ.எஸ். பணியாற்றி வருகிறது.