Himachal Pradesh : தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் : Himachal Pradesh : தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டம் சைன்ஜ் பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஞாயிற்றுகிழமை விடுமுறையை கழித்து, திங்கள்கிழமை காலை தனியார் பேருந்தில் ஒரு சிலர் பணிக்கும், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கும் வழக்கம் போல புறப்பட்டனர். ஆனால் விதியோ அவர்களின் கதையில் வேறு கதையை எழுதி இருந்தது.

ஜங்லா கிராமம் அருகே சைன்ஜ் பள்ளத்தாக்கில் பேருந்து சென்று கொண்டிருந்தப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து குலு துணை கமிஷனர் அசுதோஷ் கர்க் அதிகாரப்பூர்வமாக அளித்த‌ தகவல் : திங்கள்கிழமை காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமம் அருகே சைஞ்ச் செல்லும் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற‌னர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அசுதோஷ் கார்க் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சுட்டுரையில் விபத்து குறித்து பதிவு செய்து, காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக‌ மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் உள்ளனர் என்று தெரிவித்திருந்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த இழப்பை தாங்கும் வலிமையை கடவுள் அளிக்க பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

குலுவின் சைன்ஜ் பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டம் தியோக் அருகே புகாரோ நுல்லாவில் உள்ள பள்ளத்தாக்கில் பிக்கப் வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 28 பேர் காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த 9 பேர், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.