Eknath Shinde : மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிப்பதில் வெற்றி

மும்பை: Eknath Shinde : மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிப்பதில் வெற்றி பெற்றுள்ளது

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகியுள்ள‌ ஏக்நாத் ஷிண்டே, திங்கள்கிழமை மகாராஷ்டிரா மாநில‌ சட்டப் பேரவையில் 144 எம்எல்ஏக்களின் பலத்துடன் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் 31 மாதங்கள் ஆட்சி செய்த மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஏக்நாத் ஷிண்டே. 50 சதவீத சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கி இருந்தனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி செய்யும் என்று எச்சரித்தப்போதும், அவர்கள் அங்கிருந்து வர மறுத்துவிட்டனர். இறுதியாக, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, ​​மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பினர்.

பாஜகவுடன் கூட்டணி அரசு அமைப்பது என முடிவான பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜூன் 30-ஆம் தேதி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று அறிவித்தார். அன்றைய இரவே பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை, திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தலைவராக‌ பாஜகவைச் சேர்ந்த‌ ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். வாக்கெடுப்பில் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ராகுல் நர்வேகர் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெருபான்மை நிரூப்பிப்பதில் வெற்றியடையும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை தனது பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நிரூப்பித்துள்ளது.

ஜூலை, 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற்ற சோதனைகளில் வெற்றி பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, அடுத்து தனது ஆதரவாளர்களுக்கும், பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவியை வழங்கி, துறைகளை ஒதுக்குவதிலும் வெற்றி பெறுவார் என்றே தெரிகிறது.