Goods train derail: புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்; போக்குவரத்து நிறுத்தம்

புவனேஸ்வர்: Goods train derail near Bhubaneswar railway station: புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு சரக்கு ரயிலின் ஐந்து வேகன்கள் தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சக்ரதார்பூர் பிரிவில் இருந்து புவனேஸ்வர் மற்றும் கட்டாக் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்றிரவு 8.35 மணியளவில் விஜயநகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ காயமோ ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், சில ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட ரயில்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை:-
ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஹோம் சிக்னலில் சிக்கியுள்ளது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மஞ்சேஸ்வரில் நிறுத்தப்பட்டது. ஜன் சதாப்தி ரயில் புவனேஸ்வர் ரயில்நிலையத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது.
ஜுனகர் ரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் புவனேஸ்வர் ஸ்டேஷனில் நிறுத்தப்படவில்லை.
பூரி-துர்க், தபஸ்வினி, பூரி-காந்திதாம் மற்றும் பூரி-ஹவுரா ஆகிய ரயில்கள் புவனேஸ்வர் நிலையத்தை நோக்கி செல்லும் வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 8:30 மணியளவில், புவனேஸ்வருக்குச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 5 வேகன்கள் தடம் புரண்டன. ஒரு வேகன் இப்போது மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என அவர் தெரிவித்தார்.

மேலும் புவனேஸ்வர்-கொல்கத்தா வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹவுரா-சென்னை வழித்தடம் நன்றாக உள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு காலை 8 மணிக்குள் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும். ஆனால் சில உள்ளூர் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படும். இந்த விபத்தால் கொல்கத்தா – சென்னை இடையேயான பல ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் வீடுகளுக்கோ அல்லது ஹோட்டலுக்கோ திரும்ப முடியாததால் ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.