Corona virus: இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு

corona-virus
இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு

Corona virus: நான்கு மாத காலத்தில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 13,216ஆக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 793ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 68,108ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 23 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 24 ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்றும் 2.73 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. நேற்றை தினத்தை ஒப்பிடுகையில் இன்று நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,045 உயர்ந்துள்ளது.

குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. மகாராஷ்டிராவில் தினசரி கோவிட் பாதிப்பு 4,165 ஆக பதிவாகியுள்ளது. மாகாரஷ்டிராவில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21,749 ஆக உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 19,210 பேரும், கர்நாடகாவில் 4,371 பேரும், டெல்லியில் 3,948 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 598 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது.

நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரே நாளில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 824 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை ஒட்டுமொத்தமாக 196 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Actor Ajith: மீண்டும் பைக் பயணத்தில் நடிகர் அஜித்