Chief Air Staff flies Indigenous Aircraft: பெங்களூருவில் போர் விமானங்களை இயக்கி விமானப்படை தளபதி ஆய்வு

பெங்களூரு: CHIEF OF THE AIR STAFF FLIES INDIGENOUS AIRCRAFT AT BANGALORE: பெங்களூருவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்விமானங்களை இயக்கி விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு செய்தார்.

விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, பெங்களூருவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலகுரகப் போர்விமானம் (எல்சிஏ) தேஜாஸ், இலகுரக காம்பேட் ஹெலிகாப்டர் (எல்சிஎச்), ஹிந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40 (எச்டிடி-40) ஆகிய மூன்று உள்நாட்டு தயாரிப்புகளை அவர் பறக்கவிட்டார். இவை தற்சார்பு இந்தியாவை நோக்கிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளனன.

எல்சிஎச் மற்றும் எச்டிடி-40 ன் திறன்கள் மற்றும் தேஜாஸ் புதுப்பிப்புகளை விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வுசெய்தார். தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் புரிந்துகொள்ள வடிவமைப்பாளர்கள் மற்றும் சோதனைக் குழுவினருடன் அவர் உரையாடினார்.

விமானப்படை தலைமைத் தளபதி, 2022 ஆகஸ்ட் 06 அன்று, ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே நினைவு உரையை நிகழ்த்தினார். இதில் இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் தயாராக இருக்கும் போர்ப்படையாக மாற்றுவதற்கு இந்திய விமானப்படையின் திறன் மற்றும் படை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி பேசினார்.

1963ஆம் ஆண்டிலிருந்து மிக்-21 போர் விமானங்கள் விபத்து:
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் கடந்த 28ம் தேதி அன்று மிக் 21 இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதன் மூலம் , ஒட்டுமொத்தமாக இதுவரை இந்திய விமானப்படை 293 மிக் 21 போர் விமானங்களையும் , 200க்கும் மேற்பட்ட அதிகாரிகளை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 28ஆம் தேதி இரவு சுமார் 9:10 மணியளவில், ராஜஸ்தானில் மிக்-21 ‘பைஸன்’ கிழே விழுந்து நொறுங்கியதில் இரண்டு பயிற்சி பெற்ற பைலட்டுகள் விங் கமாண்டர் மோஹித் ராணா மற்றும் லெப்டினன் அத்விதியா பால் உயிரிழந்தனர். இது போன்ற நடப்பது புதிது அல்ல; தொடர்ச்சியாக அரங்கேறி கொண்டு இருக்கிறது.

மிக்-21 போர் விமான விபத்துகளில் உயிரிழந்த விமானிகளின் எண்ணிக்கையை வழங்க இந்திய விமானப்படை மறுத்தாலும், இன்று வரை சுமார் 200 பைலட்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய கண்டுபிடிப்பான மிக்-21 பைஸன் போர் விமானத்தை 1963ம் ஆண்டில் இருந்து இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் நிலையில், இதுவரை 293 மிக்-21 போர் விமானங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.மிக்-21 போர் விமான விபத்துக்களை கணக்கிட்டால் அது 30.97% ஆக உள்ளது. இது மோசமானது ஒன்றாகும். ஆரம்ப கட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து மிக்-21 போர் விமானங்கள் வாங்கப்பட்டாலும், பிற்காலத்தில் அவற்றில் பாதிக்கும் மேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அரங்கேறியது இந்தாண்டின் முதல் மிக்-21 போர் விமான விபத்தாகும். 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6 மிக்-21 போர் விமான விபத்துகள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா மிக்-21 போர் விமான விபத்தில் உயிரிழந்திருந்தார். மிக்-21 விபத்துக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்திய விமான படையின் மோசமான காலம் என்றால் அது 1999ம் ஆண்டு தான். கார்கில் போரின் போது 16 மிக்-21 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது.கார்கில் போருக்கு முன்பு , 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெற நடத்தப்பட்ட போரில் 11 போர் விமான விபத்துகள் நடந்தன. 2016 ஆம் ஆண்டில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில் “1970 முதல், 170க்கும் மேற்பட்ட இந்திய விமானிகள் மற்றும் 40 பொதுமக்கள் மிக்-21 போர் விமான விபத்துகளில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மிக்-21 போர் விமானங்களின் உதிரிபாகங்கள் மற்றும் பிற முக்கிய உபகரணங்கள் ரஷ்ய கார்ப்பரேஷனிடமிருந்து வரவில்லை. அதன் பிறகு இந்திய விமானப் படை உதிரிபாகங்களுக்காக CIS நாடுகள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்-ஐ சார்ந்திருக்க வேண்டியிருந்தது.மிக்-21 போர் விமானத்தின் பிரதான தொழில்நுட்பம் 1950 காலத்து உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.