Aiims Hospital Server Recovery: எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் நிலைமை என்னாச்சி: மத்திய அரசு பரபரப்பு தகவல்!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று முடக்கப்பட்ட 5 இணைய சர்வர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக மத்திய உளவுத்துறை தகவல் கூறியுள்ளது.

இந்தியாவிற்கே புகழ்பெற்ற மருத்துவமனையாக எய்ம்ஸ் உள்ளது. இங்கு அனைத்து வகையான உயர்ரக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் அங்கு வருகின்ற நோயாளிகளின் டேட்டாக்கள் பாதுகாப்பது மற்றும் ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களின் தகவல்கள் சர்வர் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி அன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு திடீரென்று சர்வர் முடக்கப்பட்டது. இது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் எய்ம்ஸின் இணையதள தகவல்களை சேகரித்து வைக்கும் கணினியின் சர்வர் உள்ளிட்டவைகளை ஹேக்கர்கள் முடக்கியிருப்பது தெரியவந்தது. ஆனாலும் உலகத்தையே மிரட்டி வரும் ரான்சம்வேர் என்கின்ற வைரஸ் பாதிப்பாலும் சர்வரில் ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கும் என சொல்லப்பட்டது.

இது குறித்து தேசிய தகவல் மையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது பற்றி மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியிருப்பதாவது: ரான்சம்வேர் வைரஸ் காரணமாக எய்ம்ஸ் ஆய்வகங்கள் மற்றும் புறநோயாளிகள் பற்றிய கனிணி பதிவுகள் பாதிப்படைந்திருப்பது என்றார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முடக்கப்பட்ட 5 இணைய சர்வர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. இந்த ஹேக்கர்கள் சீனாவில் இருந்து ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று மத்திய உளவுத்துறை பரபரப்பான தகவலை கூறியுள்ளது. திடீரென்று முடங்கிய சர்வரால் நோயாளிகளின் வருகை உள்ளிட்ட சில காரணங்கள் தடை பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.