With out mask fine : சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூல்

சென்னை: With out mask fine in chennai : சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது

அண்மைக்காலமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, தமிழ்நாடு பொது சுகாதாரத் திட்டம் 1939-இன்படி புதன்கிழமை முதல் சென்னையில் முககவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சென்னையில் புதன்கிழமை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்க நல்லூர் ஆகிய பகுதிகளில் முககவசம் அணியாதவர்களை அடையாளம் கண்டு அபராதம் வசூல் செய்தனர். இதில் முககவசம் அணியாத 121 பேரிடம் ரூ. 60,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னையில் கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்துகள் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமென்று சென்னை மாநகராட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை முதல் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படுகிறது. வியாழக்கிழமையும் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் செய்யப்படும். அரசின் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.