Dasara holiday: தென் கன்னட மாவட்டத்தில் செப்டம்பர் 26 முதல் தசரா விடுமுறை அறிவிப்பு: அமைச்சர் முக்கிய உத்தரவு

பெங்களூரு: (Karnataka Dasara Holidays 2022) தசரா விடுமுறை வழங்குவது தொடர்பாக எழுந்த குழப்பங்களுக்கு கல்வி அமைச்சர் விடை அளித்துள்ளார். முன்னதாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை உணர்ந்து மங்களூரு உள்ளிட்ட மாவட்டத்தில் (தென் கன்னட‌ மாவட்டம்) செப்டம்பர் 26 முதல் தசரா விடுமுறை அறிவித்து மாநில‌ தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா பண்டிக்கை ( Dasara festival in Mysore) உலக புகழ் பெற்றது. இந்த பண்டிக்கை நிகழாண்டு செப். 26 ஆம் தேதி முதல் அக். 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. மைசூரைப் போலவே மங்களூரிலும் தசரா கொண்டாடப்படுகிறது. ஆனால், தென் கன்னட மாவட்டத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தசரா விடுமுறை அளிக்கப்படும் என்று முன்னதாக அரசு அறிவித்தது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கல்வி அமைச்சர் அரசின் உத்தரவில் மாற்றம் செய்துள்ளார்.

பள்ளி தசரா விடுமுறையை மாற்ற மாவட்ட ஆட்சியர்கள் (District Collectors) அல்லது மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மங்களூருவில் தசரா விடுமுறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10 வரை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை கொண்டாடும் நிபந்தனையின் பேரில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும் பள்ளிகளில் கல்வி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்கள் முன்பே வெளியிடப்பட்டன. பள்ளி தொடங்குதல், பள்ளி மூடும் நாள், தசரா விடுமுறை, கோடை விடுமுறை ( Dasara holiday, summer vacation) மற்றும் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த‌ வழிகாட்டுதல்களில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.