Mysterious death of young girl: அரியலூர் அருகே இளம்பெண் மர்ம உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

அரியலூர்: The relatives of the young girl near Ariyalur staged a road blockade to arrest those responsible for the mysterious death.. அரியலூர் அருகே இளம்பெண் மர்ம உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் புதுத் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி கமலாதேவி. இவர்கள் இருவருக்கும் இடையே திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

தினேஷ் சென்னையில் பணிபுரிந்தபோது அங்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் இதுதொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கமலாதேவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தினேஷ் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அதிர்ச்சி அடைந்த கமலாதேவியின் பெற்றோர் தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கணவன் தினேஷ் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரிகள் ஆகியோர் அடித்து தூக்கில் தொங்க விட்டதாக போலீசில் புகாரளித்தனர்.

புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கமலாதேவியின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கமலாதேவி பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கமலாதேவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அனாதையாக உள்ள உயிரிழந்த கமலா தேவியின் ஒன்றரை வயது மகனுக்கு, தினேஷ் சொத்துக்களை எழுதி தர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.