Main culprit arrested in Chennai bank robbery: சென்னை வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது

சென்னை: Main culprit arrested in Chennai bank robbery: சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளி முருகன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 13ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டிப் போட்டு, மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த கொள்ளையில், சுமார் ரூ. 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். இதனைத்தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து மக்களிடையே தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியில் தங்கள் நகை, பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும். துப்பு கொடுப்பவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வங்கிக்கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி முருகன் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 13ம் தேதி வங்கியில் கொள்ளை நடந்தது. 31.7 கிலோ அடமானம் வைத்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் 11 குழு அமைக்கப்பட்டது.

முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்ட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படை அமைக்கபட்டது. மேலும் இருவர் இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய உள்ளோம். மீதமுள்ள நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வங்கியில் கொள்ளையடிக்க 7 பேர் கொண்ட குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களில் சூர்யா என்பவர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். சூர்யாவை தேடும் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்படும்.

வங்கியில் கொள்ளையடித்துவிட்டு எளிதில் தப்பிச் சென்று விடலாம் என நினைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த கொள்ளைக்கு 2 பைக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.

ஊடகங்களில் வெளியானது போல் துப்பாக்கி எல்லாம் பயன்படுத்தவில்லை. கத்தியை வைத்திருந்தாகவும் அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வங்கியில் இருந்த எச்சரிக்கை மணி ஒலிக்காதது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.