Kanchipuram Riot: காஞ்சிபுரம் அருகே பயங்கர கலவரம்; 5 பேருக்கு கத்திக்குத்து

காஞ்சிபுரம்: Terrible riot near Kanchipuram; 5 people were stabbed. காஞ்சிபுரம் அருகே கல்வெட்டு வைக்கும் பிரச்சினையில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சியின் தலைவராக புல்லட் தீனா என்கின்ற தேவேந்திரன் உள்ளார். இந்த ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைக்க இருந்ததால் , அங்கன்வாடி மையத்தில் திறப்பு விழா பெயர் பலகை கல்வெட்டு அமைக்கும்படி 8வது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன் தலைவரிடம் தெரிவித்துள்ளார் . இதன்பின் அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் திறக்கப்பட்டது.

இந்த திறப்புக்கு 3 நாட்கள் கழித்து, அம்சநாதன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்கு வாதம் முற்றி அனைவரும் அம்சநாதனை தாக்கியதில் அம்சநாதன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக அறிந்த தேவேந்திரனின் உறவினர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டில் தங்கி இருந்து , இன்று அம்சநாதன் வீடு திரும்பியது தெரிந்து அம்சநாதனை (வயது 50) மீண்டும் தாக்க வீட்டுக்குள் புகுந்த நிலையில் , குடும்பத்தினர் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அப்பகுதி சிறிது நேரம் கலவரமாக மாறியதை கண்டு அருகிலிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர்.

இந்த தாக்குதலில் அம்சநாதன் அவரது மனைவி பிரியா(37) அவரது மகன் ஹரிவரசு (25), ஹரிவரசின் மனைவி ஆர்த்தி (22), அம்சநாதனின் அக்காள் தேன்மொழி(48) அம்சநாதனின் தம்பி மகன் புகழ்நிதி (11) ஆகியோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாலு செட்டி காவல் நிலையத்தில் புகார் புறப்பட்டு காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட உறவினர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். சாதாரண கல்வெட்டு விஷயம் கலவரமாகி கத்திகுத்து, மண்டை உடைப்பு என படுகாயங்களுடன் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாலு செட்டி காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகை செய்ய இருந்த நிலையில் இதுகுறித்து காவல் ஆய்வாளர் இவர்களை எச்சரித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.