Demolition of Sami idol in Gingee Fort: செஞ்சி ராஜகிரி கோட்டையில் சாமி சிலை உடைப்பு

செஞ்சி: Demolition of Sami idol in Gingee Rajagiri Fort: செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கோயிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

கீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அதில் வடக்கில் உள்ள வாயில் வேலூர் வாயில் என்றும், கிழக்கில் உள்ளது பாண்டிச்சேரி வாயில் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டில் எதன் வழியாக சென்றாலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்லவேண்டும். செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் கோட்டைச் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது.

இதில் எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன.

இந்த குன்றுகளை இணைக்கும்விதமாக இவற்றுக்கு இடையில் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட கீழ்க்கோட்டைச்யானது கட்டபட்டுள்ளது. இந்தக் கீழ் கோட்டையில் ஒரு பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் போன்றவை உள்ளன. இராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டபட்டுள்ளது. இராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது. போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர்.

இந்நிலையில், ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் என்பவர் பூஜை செய்வதற்காக அங்கு சென்றார். அப்போது, கோவிலில் இருந்த கமலக்கண்ணி அம்மன் சிலையின் கை, கால்கள் உடைக்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் கோட்டை அலுவலகருக்கு தகவல் தெரிவித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் வந்து சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்திச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டு வந்து, அங்கிருந்த கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திராரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் செஞ்சி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.