Clash between fishermen : முன்விரோதத்தில் மீனவர்களிடையே மோதல்; 4 பேர் மண்டை உடைப்பு

விழுப்புரம்: A clash between fishermen near Marakanam resulted in the skull fracture of 4 people. மரக்காணம் அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோததால் 4 பேர் மண்டை உடைப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கைப்பாணிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால், கைப்பாணிக்குப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பையும் மீறி இளையராஜா மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.

இதனை கவனித்த அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது35) என்பவர், அரசு உத்தரவை மீறி கடலுக்குள் சென்றது குறித்து இளையராஜாவிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இளையராஜா தரப்புக்கும், கார்த்திக் தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினரும் தனித்தனி கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த அடிதடி சண்டையில் சோலைவள்ளி (60), சத்தியமூர்த்தி (35), மேகாயன் (50) உள்ளிட்ட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைவரும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் கைப்பாணிக்குப்பம் கிராமத்துக்கு சென்று தெருவில் கூடியிருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பதற்றத்தை தணிக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.