Devotees prohibited to Chathuragiri hill : சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

விருதுநகர்: Devotees prohibited from going to Chathuragiri hill temple. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கு தொடர்ந்து 4 நாட்கள், அதாவது ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரண்டு பிரதோஷங்கள், அமாவாசை மற்றும் பௌர்ணமி தரிசனத்திற்காக, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று 21ம் தேதி கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் நாளில், சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் துவங்கியிருப்பதாலும், இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது பலத்தமழையும் பெய்து வருகிறது.

எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இன்று (21ம் தேதி) முதல், வரும் 24ம் தேதி வரையில், சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசை தினங்களில் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் இதனால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரை பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேகம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, கோவில்களில் 1008,108, சங்காபிஷேகம் நடைபெறும்.