Drug addicts Suicide Attempt: காவல் நிலையம் எதிரே போதை ஆசாமி ரகளை.. தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்: laborer tried to set fire in front of Police Station: செஞ்சி காவல் நிலையம் எதிரே போதையில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 40). இவர் செஞ்சி பேருந்து நிலையத்திலும் திண்டிவனம், விழுப்புரம், சேத்துபட்டு, சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய பேருந்துகள் வந்து செல்லும் சாலை சந்திப்பிலும் பேருந்துகளில் திண்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

நடராஜனுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவாராம். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக செஞ்சி கூட்டுரோட்டில் தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவி குப்பம்மாள் கொதிக்கும் ரசத்தை நடராஜன் முகத்தின் மீது ஊற்றிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மனைவின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செஞ்சி காவல் நிலையம் முன் நடராஜன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந்நிலையில் நேற்று குடி போதையில் செஞ்சி காவல் நிலையம் எதிரே அமர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த நடராஜன், தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரை வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் புகாரே இல்லாமல் என்ன நடவடிக்கை எடுப்பது என்றனர்.

இதனால் திடீரென நடராஜன் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர். இந்த தீக்குளிப்பு முயற்சியால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் நடராஜன் நீண்ட நேரம் செஞ்சி காவல் நிலையம் எதிரிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கிருந்து நடராஜன் புறப்பட்டுச் சென்றார். அவர் குடிபோதையில் இருந்ததால் போலீசார் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.