Law Commission meeting in Delhi today : தில்லியில் இன்று சட்டப்பணிகள் ஆணையக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தில்லி: Law Commission meeting in Delhi today, PM Modi to attend: தில்லி விஞ்ஞான பவனில் சனிக்கிழமை நடைபெற உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதல் கூட்டம் ஜூலை 30, 31-ஆம் தேதிகளில் நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணையம் (National Legal Services Commission) ஏற்பாடு செய்துள்ளது. தேசிய அளவில் 676 சட்டப்பணிகள் ஆணையம் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆணையங்களில் தலைவர்களாக மாவட்ட நீதிபதிகள் உள்ளனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணையங்கள் வாயிலாக பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல் படுத்தி வருகிறது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தால் நடத்தப்படும் லோக் அதாலத் (Lok Adalat) எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை முறைப்படுத்துவதன் மூலம் நீதிமன்றங்களில் சட்டச்சுமைகளை குறைப்பதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம்.இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகிறது.

சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞராக இருப்பார். நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு (Amicable settlement between the parties) ஏற்படுத்துதல். நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல்.வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல் ஆகும்.

இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும். “லோக்” என்பது மக்களையும் “அதாலத்” என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். மக்கள் நீதிமன்றம் என்ற எண்ணத்தினை முன்மொழிந்ததில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.பகவதி (Former Chief Justice PN Bhagwati) அவர்களுக்கு முதன்மையான பங்குண்டு. மக்கள் நீதிமன்றம் முதன் முதலில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில் 1982-ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது.

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் (pending cases) மட்டுமல்லாமல் நீதிமன்றங்களுக்கு வர இருக்கும் வழக்குகளுக்கும் சமரசம் மூலம் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வுகாணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் செல்ல‌ முடியாது. காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும்.