3 arrested in financier’s murder case: பைனான்சியர் கொலை வழக்கில் 3 பேர் கைது

நாமக்கல்: 3 arrested in financier’s murder case: நாமக்கல் அருகே பைனான்சியர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே பாதரை பகுதியில் வசித்து வருபவர் கவுதம். இவர் வெப்படை பகுதியில் 6 வருடங்களாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கவுதம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகியாக இருந்தார்.

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டி விட்டு பாதரை பகுதியில் இவரது வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே காருடன் நின்று கொண்டிருந்த மர்ம கும்பல் கவுதமை தாக்கி, மிளகாய் பொடியை சம்பவ இடத்தில் தூவி விட்டு காரில் கடத்தியதுடன், அவரது டூவீலரையும் கடத்தி சென்றனர்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் கவுதம் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் அவரது மனைவி திவ்யபாரதிக்கு கணவர் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வெப்படை போலீசில் திவ்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து, கவுதம் குடும்பத்தாருடன் விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே நிதி நிறுவன அதிபர் கவுதம் அணிந்து இருந்த செருப்பு, ரத்தக்கறை, உடைந்த கண்ணாடி உள்ளிட்ட தடயங்கள் போலீசாரால் சேகரிக்கப்பட்டன. இவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் ஏரிக்கரையில் கெளதமை சடலத்தை தனிப்படை போலீசார் கண்டெடுத்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கவுதமனின் உடல் பாதரை மயானத்தில் எரியூட்டபட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வெப்படையை சேர்ந்த தீபன்( 25,), பிரகாஷ்( 29,), குணசேகரன்( 27 ) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளியான தீபன் என்பவருக்கும், பைனான்ஸ் தொழில் செய்து வரும் கவுதமன் என்பவருக்கும் 1,60,000.00 ரூபாய் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு,இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

கவுதமன் பைனான்சில் மேலாளர்களாக பணியாற்றி வரும் பிரகாஷ், குணசேகரன் ஆகியோர் பைனான்ஸ் பணத்தை கையாடல் செய்ததை கவுதமன் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது. இதனால் இவர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. மூவரும் கவுதமனை தீர்த்து கட்ட செய்து அதன் படி மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து சம்பவத்தன்று கவுதமனை தாக்கி கொலை செய்து பிரேதத்தை சங்ககிரி சோதனை சாவடி அருகே உள்ள ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளனர். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.