Udupi court sentenced 20 years : மைனர் சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்து கொள்வதாக‌ ஏமாற்றியதாக, இன்ஸ்பெக்டர் கலாவதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார்.

உடுப்பி: மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை (20 years imprisonment) விதித்து உடுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுப்பி மாவட்டம் கொடவூரைச் சேர்ந்த 28 வயது கிரண் என்பவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 16 வயது மைனர் பெண்ணை (A 16-year-old minor girl) காதலித்து வலையில் விழ வைத்து, திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த‌ செயலை தனது செல்போனில் படம் பிடித்து, ஆபாசமான வீடியோவை அவ்வப்போது காட்டி மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியை பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எனினும், அருகில் வசித்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லுமாறு சிறுமியை ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பாலியல் பலாத்காரம் தொடர்பாக‌ உடுப்பி மகளிர் காவல் நிலையத்தில்( Udupi Women’s Police Station) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக கிரண் மீது இன்ஸ்பெக்டர் கலாவதி (Inspector Kalavati) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக உடுப்பி நீதிமன்றத்தில் சுமார் 28 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

வழக்கின் விசாரணைக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட கிரணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இது மட்டுமல்லாது, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டியதற்காக, ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டது. மேலும் தண்டனையை ஒரே சேர அனுபவிக்க வேண்டும் என தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, 4 ஆண்டுகளுக்கான‌ இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.