Kanal Kannan’s bail dismissed: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: Stunt master Kanal Kannan’s bail plea dismissed: பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசியது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயலில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்ற வேண்டிய நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

ஸ்டண்ட் மாஸ்ட் கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதால் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆத்திரமடைந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன், கனல் கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஏற்கெனவே பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் நடந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம், பிரிவு 153ன் கீழ் கலகத்தை தூண்டிவிடுதல், பிரிவு 505(1)(பி)ன் கீழ் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் என கீழ் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை கைது செய்வதற்காக மதுரவாயல் வீட்டில் சென்று தேடியுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதைபோல வடபழனி, வளசரவாக்கம் வீடுகளிலும் தேடியும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இல்லை என்பதால் அவர் தலைமறைவாகி விட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கனல் கண்ணன் முன்ஜாமின் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமின் வழக்கு விசாரணையானது கடந்த 11ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தது. கடல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போலீசாரின் கைதுக்கு பயந்த நடிகரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் புதுச்சேரியில் தலைமறைவானார். அவரது செல்போனை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர். பாண்டிச்சேரியில் கைது செய்த கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் த.பெ.தி.க. குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவரான நீதிபதி என். கோதண்டராஜ் முன்பு விசாரணைக்கு வந்ததும் அப்போது, ஜாமீன் வழங்க காவல்துறை மற்றும் த.பெ.தி.க. தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி, ஜாமீன் கோரியகனல் கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.