Moi party collects Rs 15 crore: புதுக்கோட்டை அருகே மொய் விருந்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி வசூல்

புதுக்கோட்டை: Moi party near Pudukottai collects Rs 15 crore in one day: புதுக்கோட்டை அருகே மொய் விருந்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில பொருளாதரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் நடத்தும் மொய் விருந்தின் போது, இலை மறை காயாக அக்குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இப்பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து, இப்பகுதி மக்களின் வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாக மொய் விருந்து நிகழ்ச்சி மாறியுள்ளது. மேலும் தொழில் அல்லது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை முன்னேறச் செய்ய அளிக்கப்படும் வட்டியில்லாக் கடன் போன்றதே இந்த மொய் விருந்து. சாதி, மதம் பாராமல் ஊரார் அனைவருக்கும் மொய் விருந்து அழைப்பிதழ் வழங்குவர்.

ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் மட்டும் நடைபெறும் மொய் விருந்துகளை பொருளாதாராத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களும் நடத்துகின்றனர். மொய் விருந்தின் போது பெறப்படும் பல இலட்சம் முதல் பல கோடி வரை பெறப்படும் மொய்ப் பணத்தை வசூலிப்பதற்கு தனிச்சிறப்பு ஆட்களையும் நியமித்தும், பணம் எண்ணுவதற்கு இயந்திரங்களையும் பயன்படுத்தும் அளவிற்கு சென்று விட்டது.

தற்போது இந்த மொய் விருந்து நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அன்னவயல், ஆலங்குடி போன்ற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் பிரபலம். மொய் விருந்தின் போது ஆட்டுக்கிடாய் கறியுடன் உணவு பரிமாறுவது கட்டாயம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்தும் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்துவர்.

ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மொய் விருந்து விழா நடத்த வேண்டும். தான் இதுவரை பெற்ற மொய் பணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் முறையாக திருப்பி செய்த பின்னரே அடுத்த முறை மொய் விருந்து வைக்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகள் இன்றளவும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய்விருந்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி வசூலாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் மொய் விருந்து விழாக்கள் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்தும் மொய் விருந்து விழா நடைபெற்றது. இந்த மொய் விருந்தில் ஒரே நாளில் சுமார் ரூ.15 கோடி வரையில் வசூலாகியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே ரூ.2.50 கோடி மொய் வசூலாகியுள்ளது. 20 பேருக்கு தலா ரூ.50 லட்சமும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொய் விருந்து நடத்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.