Funding for coconut saplings: தென்னங்கன்றுகளை நடுவதற்கு 25% மானியத்துடன் நிதியுதவி

சென்னை: Applications are invited for Coconut Development Board Schemes 2022-23. தென்னை வளர்ச்சி வாரியத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய பகுதியில் தென்னங்கன்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இக்கன்று சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இத்திட்டத்திற்கான மானியத் தொகை, இரண்டு தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

தென்னை நாற்றங்கால் பண்ணை அமைத்தல் திட்டத்தின் மூலம், தரமான நாற்று உற்பத்தி செய்யும் விவசாயி அல்லது தனியார் துறை மற்றும் பிற நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தென்னை நாற்றங்கால் பண்ணை அமைப்பதற்கு, 25% மானியம் வழங்கப்படுகிறது. 0.10 ஹெக்டேருக்கு 6,250 நாற்றுகள் உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 வீதம், ஆண்டுக்கு 25,000 நாற்றுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 0.4 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மேலே கூறப்பட்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் (www.coconutboard.gov.in) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, இணைப்புகளுடன் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் சான்று பெற்று தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 94 சந்தாவாக செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடையும் நபருக்கு ஆயுள் தொகையாக ரூ.5.00 லட்சமும், விபத்து ஏற்பட்டு ஊனமுற்றோர் ஆகும் பட்சத்தில் ரூ.2.50 லட்சமும், மருத்துவ செலவிற்கு ரூ. 1.00 லட்சம் வரை கிடைக்கப்பெறும்.

இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இணைப்புகளுடன் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் (வேளாண் உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை அலுவலர்), ஊராட்சி தலைவர் சான்று பெற்று தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.