Women Protesting: ஆப்கானிஸ்தான்: உயர்கல்வி தடையை எதிர்த்து போராடிய பெண்களை விரட்டி அடிக்கும் தலிபான்கள்

காபூல்: மக்களாட்சியை வீழ்த்திய தலிபான் பயங்கரவாதிகள் (Women Protesting) ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர்.

ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் எங்கேயும் வெளியில் செல்லக்கூடாது. அதே போன்று பள்ளி, கல்லூரிகளில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக அமர்ந்து படிக்கக்கூடாது இது போன்ற பல தடைகளை ஒன்றன் பின் ஒன்றாக விதித்து வருவதால் அந்நாட்டில் வாழ்ந்து வரும் பெண்கள் போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்கு தடை விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிர பேராசிரியர்கள் என்று பல தரப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக ஆப்கானிஸ்தான் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த செய்தி சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், உயர்கல்வி படிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர்.

அப்போது கோஷங்களை எழுப்பியவாறு வீதிகளில் பெண்கள் சென்றனர். அவர்களை தலிபான் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்கள் தொடர்ந்து முன்னேறியபோது அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சி அளித்தனர். பெண்கள் அங்கும் இங்குமாக ஓடினர். தொடர்ந்து தலிபான் பாதுகாப்பு படையினர் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.