Imran Khan shot in assassination attempt: பாகிஸ்தானில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிப்பு

வசிராபாத் (பாகிஸ்தான்): Former Pakistan prime minister Imran Khan shot in assassination attempt.பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரின் அல்லாவாலா சௌக் அருகே இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் அணிவகுப்புக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இந்த எதிர்ப்பு அணிவகுப்பின் போது அடையாளம் தெரியாத ஒருவர் கண்டெய்னர் ஏற்றப்பட்ட டிரக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காயமடைந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தில்லை என பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் முதலில் செய்திகள் வெளியிட்டன.

அதன் பின், 70 வயதான இம்ரான் கானின் வலது காலில் காயமடைந்துள்ளதாகவும், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இம்ரான் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் செய்தி தொலைக்காட்சி சேனல்களும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவரான அசாத் உமர் கூறுகையில், இம்ரான் கானின் காலில் தோட்டா தாக்கியதாகயுள்ளதாகவும், தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும், உள்ளூர் தலைவர் அஹ்மத் சாத்தா உட்பட இருவர் படுகாயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், கான் சாலை வழியாக லாகூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். தற்போது அவரது காலில் புல்லட் தாக்கியுள்ளதால் அவரின் உடல்நிலை சரியில்லை என்று உமர் கூறினார்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை அடையாளம் தெரியாத இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் கான் பாதுகாப்பாக இருப்பதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தாக்குதலில் கானும் காயமடைந்தார் என்பது பின்னர் தான் தெரியவந்தது. இந்த தாக்குதலில் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் செனட்டர் பைசல் ஜாவேத் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.