UN resolution against Sri Lanka : இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றம் : இந்தியா புறக்கணிப்பு, சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு

மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் 20 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன.

ஜெனீவா: Implementation of UN resolution against Sri Lanka: இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த‌ தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து உள்ளது.

ஜெனிவாவில் இப்போது ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51வது அமர்வு (51st Session of the UN Human Rights Council) நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் 20 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன.

தீர்மானத்திற்கு எதிராக விழுந்த வாக்குகளை விட ஆதரவாக விழுந்த வாக்குகள் அதிகம் என்பதால் இந்தத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, மெக்சிகோ, உக்ரைன் (USA, UK, Germany, Mexico, Ukraine) உள்ளிட்ட 20 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இந்தியா மட்டுமின்றி ஜப்பான், நேபாளம், கத்தார் உள்ளிட்ட 20 நாடுகள் இதைப் புறக்கணித்த நிலையில், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்து இருந்தது. இலங்கைத் தமிழர்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்த ஐநாவுக்கான இந்தியத் தூதர் இந்திராமணி பாண்டே, நிலைமையை மேம்படுத்த இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.

2009க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், குடியேற்றம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் சமீபத்தில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ளவும் இலங்கை மக்களுக்கு இந்தியா உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பயனுள்ள தீர்வைக் கண்டறிவது மற்றும் அங்குள்ள தமிழர்களுக்குச் சமத்துவம், நீதி, அமைதி பெற்றுத் தருவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தியா முடிவுகளை எடுத்து வருகிறது என்று ஐநாவுக்கான இந்தியத் தூதர் இந்திராமணி பாண்டே (Indramani Pandey, India’s Ambassador to the UN) தெரிவித்தார்.

கடந்த ஆண்டும் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிராகக் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019 மற்றும் 2021 ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 2015ஐ தவிர அனைத்து முறையும் இது தனது இறையாண்மையை மீறுவதாக இலங்கை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில் 20,000 க்கும் அதிகமானோர் மாயமானதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. இருப்பினும், குறைந்தது ஒரு லட்சம் பேர் இந்த 30 ஆண்டு போரில் கொல்லப்பட்டு உள்ளதாகத் தமிழ் அமைப்புகள் (Tamil organizations) குற்றஞ்சாட்டி உள்ளன. குறிப்பாக 2009இல் உள்நாட்டுப் போர் உச்சமடைந்த போது பல அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகத் தமிழ் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பு மீதும் தவறு உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. கடைசி கட்ட போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சர்வதேச அமைப்புகள் (International organizations)கூறுகின்றன.