World Wildlife Day: உலக வனவிலங்கு தினம்: விழித்துக்கொள் மனிதா! பிழைத்துக்கொள் மனிதா!!

World Wildlife Day: உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த உலகின் மீது உரிமை உண்டு. இங்குள்ள வளங்கள் அனைவருக்குமானது. இதை புரிந்துகொண்டு வாழ்ந்தால், அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

எனினும், நிஜத்தில் அப்படி நடப்பதல்ல, மனித ஜாதி சற்று மதிமயங்கித்தான் போயுள்ளது. உலகம் தனக்கானது என்ற கர்வத்துடன் மனிதர்கள் வாழ்ந்து வருவதன் விளைவு, காடுகள், விலங்குகள் என அனைத்தும் பெரும் அளவில் அழிந்துகொண்டிருக்கின்றன. இதை நிறுத்த நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக முளைத்துள்ளது.

உணவு மற்றும் சுற்றுச் சூழல் சமநிலைக்கு காடுகள் மற்றும் அங்கு வாழும் உயிரினங்களின் பங்கு அளப்பரியது. அவற்றின் நிலை இன்று என்னவாக உள்ளது? மின்மினி பூச்சி தொடங்கி, காண்டாமிருகம் வரை அனைத்தின் நிலையும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

கடந்த 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு காட்டு உயிரினங்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? இவற்றின் அழிவால் மனித குலம் சந்திக்க இருக்கும் பேரிழப்பு என்ன என்பதையெல்லாம் சிந்தித்து பார்க்க நேரம் இல்லாத அவசர உலகில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

ஆண்டுதோறும் மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் மக்கள் வனங்கள் மற்றும் வன விலங்குகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து புரிந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தையே எடுத்துரைக்கிறது. மனித குலத்தின் அதி நவீன நாகரீக வளர்ச்சி காரணமாக வனங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால், சில குறிப்பிட்ட வகை தாவரங்களை மட்டும் உண்டு வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள், புழு பூச்சிகளின் நிலை குறித்து கவலை கொள்வது யார் என்பது நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வியாகத்தான் உள்ளது.

இதனால் ஏற்படும் கால நிலை மாற்றத்தால் உயிரினங்கள் பல உயிரிழக்கின்றன. காடுகளை விட்டு விலங்குகள் கிராமங்களை நோக்கி படையேடுக்கின்றன. இந்த நிலையை உருவாக்கிய பொருப்பையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று வரை வனவிலங்குகள் மற்றும் தாவரங்களில் ஏறத்தாழ 8 ஆயிரம் வகைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து கொண்டு வருகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் உயிரினங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன.

ஐ.நா. அமைப்பு கடைப்பிடிக்கும் வறுமை ஒழிப்பு, நில வளங்களை பாதுகாப்பது மற்றும் நீடித்த வகையில் பயன்படுத்திக் கொள்வது போன்ற முயற்சிகளைப் போலவே, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களை காப்பதற்கும் ஐ.நா.அமைப்பு உறுதி பூண்டுள்ளது.

பொதுமக்கள் தங்களால் முடிந்த வகையில் வனங்களை காக்க இந்த நாளில் உறுதியேற்று கொள்ளலாம். குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வோம்.

மனிதர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் நாம் நமது சூழலையும், காடுகளையும், மரங்களையும், விலங்குகளையும் காக்காவிட்டால், மனிதன் இருப்பான் உண்ண உணவிருக்காது, மனிதன் இருப்பான் குடிக்க நீர் இருக்காது, மனிதன் இருப்பான் மழை பெய்யாது, மனிதன் இருப்பான் நிழல் இருக்காது, மனிதன் இருப்பான் மற்ற எதுவும் இருக்கது.

World Wildlife Day 2022

இதையும் படிங்க: Coal India share price : கோல் இந்தியா பங்கு விலை