மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து..!

இன்று 2-வது நாளாக பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தை அறிவித்து 29-ந் தேதி திருவண்ணாமலையில் முதல் கூட்டத்தை நடத்தினேன். இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம். அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுக்களாக வாங்கி அதனை தீர்த்து கொடுக்க வேண்டும் என்பது தான்.

இதுவரை 133 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற்றுள்ளேன். 234 தொகுதிகளுக்கு செல்ல நான் முடிவு செய்துள்ளேன். இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டத்தை அதிகளவில் ஆளும் கட்சியினர் பார்த்து வருகிறார்கள். அவர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அப்படியாவது அவர்களுக்கு புத்தி வரட்டும். சுய புத்திதான் இல்லை. நான் சொல்வதையாவது கேட்கட்டும்.

ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை விவசாயிகள் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைகடனை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.