“நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராடுவேன்” – ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஹத்ராஸ் செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை ஹத்ராஸ் செல்லவிடாமல் தடுத்த உ.பி காவல் துறையினர், ராகுல் காந்தியையும் கீழே தள்ளிவிட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.இந்நிலையில், ஹத்ராஸுக்கு மட்டும் நேரில் சென்ற ராகுல், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப் ஆகியவற்றில் நடைபெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்திக்காதது ஏன் என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரப் பிரதேசத்தைப் போல இல்லாமல், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை மறுக்கவில்லை, அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தவில்லை, நீதியின் வழியை தடுக்கவில்லை.

அவர்கள் அவ்வாறு செய்தால், நீதிக்காக போராட நான் அங்கும் செல்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.