மேற்கு வங்காள தேர்தலில் துப்பாக்கிச்சூடு

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குச்சாவடிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பலத்த பாதுகாப்பையும் மீறி அங்கு வன்முறை உருவானது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சியான பா.ஜனதா தொண்டர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜனதா தொண்டர்களும் மோதிக்கொண்டனர்.

வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சி தொண்டர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். ஓட்டுச்சாவடிக்கு வெளியே வெடிகுண்டுகள் வீசப்பட்டது. வன்முறை அதிகமானதால் மத்திய ரிசர்வ் பிரிவு போலீஸ் பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.

ஆனாலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. அந்த கிராம மக்களே திரண்டு வந்து பாதுகாப்பு படை வீரர்களை தாக்கினார்கள். அதோடு கலவரக்கும்பல் போலீசாரின் துப்பாக்கிகளை பறிக்கவும் முயன்றனர்.

இதனால் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.