கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பாடு..!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் சிறு, குறு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கபட்ட போது நீண்ட போராட்டங்களுக்கு பின்பு சொந்த ஊர் சேர்ந்த இவர்கள், சமீபத்தில் தான் மீண்டும் வேலைக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு ஆலைகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரொனா இரண்டாவது அலை பரவும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மீண்டும் ஊரடங்கு அறிவித்தால் திரும்பி ஊருக்கு போக முடியாது என்கிற அச்சத்தால் அவர்கள் தற்போதே போகத் தொடங்கிவிட்டதாகவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் வணிகர்கள் தெரிவித்தனர்.