விஜயதசமி அன்று செய்யவேண்டிய 3 விஷயங்கள்..!

நவராத்திரியின் பத்தாவது நாளான இந்த விஜயதசமி அன்று புதியதாக நாம் எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும் அதன் மூலம் நமக்கு பல மடங்கு வெற்றியும், பல மடங்கு லாபம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதியதாக தொழில் தொடங்குபவர்கள், புதியதாக படிப்பினை ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு, புதியதாக ஏதாவது ஒரு கலை துறையில் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு, இந்த நாள் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்த ஒரு விஷயம்தான். ஜெயத்தை தரக்கூடிய இந்த விஜயதசமி நன்னாளில் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நாம் செய்ய வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலாவது விஷயம். நாம் எல்லோருமே கஷ்டப்படுவது பணம் காசு சம்பாதிக்கத் தான். அந்த காசு நம் கையில் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய கையில் சேமிப்பு உயர வேண்டும் என்று மனதார அந்த அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு சிறிய அளவிலான உண்டியலை வாங்கி பூஜை அறையில் வைத்து, அதில் முதல் சேமிப்பு தொகையை இந்த நன்னாளில் சேமிக்க தொடங்கலாம். 11 ரூபாய், 21 ரூபாய், 51 ரூபாய், 101 ரூபாய் இப்படி ஒற்றைப்படை கணக்கில் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த உண்டியலில் இன்றைய தினம் போட்டு உங்களுடைய சேமிப்பை தொடங்குங்கள். வெறும் ஒரு ரூபாய் நாணயத்தை உண்டியலில் போட்டு இன்று சேமிப்பை தொடங்கினாலும் உங்களுடைய சேமிப்பு நிச்சயமாக பல மடங்கு உயரும்.

இரண்டாவது விஷயம். நம்முடைய வீட்டில் காசு பணம் நிறைவாக இருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனநிறைவோடு இருக்கவேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். ஏனென்றால் பணம் காசு மட்டும் வாழ்க்கை அல்ல. ஆரோக்கியமான வாழ்க்கையும் நமக்கு அவசியம் தேவை அல்லவா. இன்றைய தினம் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைத்து, இன்று நீங்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்யலாம்.

ஏழையாக இருப்பவர்கள், உடல் நிலை சரியில்லாது இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுக்காக உங்களால் முடிந்த தானத்தை இன்றைய தினம் செய்வது மிக மிக நல்லது. முடிந்தால் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கி கூட நீங்கள் தானமாக கொடுக்கலாம். அது உங்களுடைய சவுகரியம்.

மூன்றாவதாக, உங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு பஞ்சம் வரக்கூடாது என்று அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு கடைக்குச் சென்று புதியதாக கல்லுப்பு, பச்சரிசி, துவரம்பருப்பு, இந்த 3 பொருட்களையும் வாங்கி இந்த 3 பொருட்களையும் பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவிட்டு, அதை எடுத்து இன்று சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் கல்லுப்பு ஜாடி, மசாலா பெட்டி இவைகளில் பொருட்களை நிரம்ப இன்றைய தினம் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மேல் சொன்ன 3 விஷயங்களையும் மனதார நம்பிக்கையோடு மேற் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் இல்லம் கோவிலாக மாறும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிங்க: மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது