Vijay makkal iyakkam: விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி

vijay political party
விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம்(Vijay makkal iyakkam) களம் இறங்கியிருக்கிறது. இதற்கு விஜய் அதிகாரப்பூர்வ அனுமதியைக் கொடுத்திருக்கிறார். இந்த முறை அவரது இயக்கத்தின் கொடியையும், அவரது படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

இதற்காக ரசிகர்களைச் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டத் தலைவர்களும், கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எப்படியெல்லாம் தேர்தல் பிரசாரத்தைச் செய்ய வேண்டும் என்றும், இதுவரைக்கும் செய்த நற்பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வியூகங்கள் குறித்தும் ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன் பலனாக ரசிகர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், நீண்ட கால பிரச்சினைகள் பற்றிப் பட்டியலிட்டனர். அவற்றையெல்லாம் தங்கள் சொந்த முயற்சியால் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கிறது. ரசிகர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் தலைமை கண்காணித்துக் கொண்டிருந்தது. சிறப்பாக பணியாற்றிய ரசிகர்களுக்கு உற்சாகமும் அளிக்கப்பட்டது. இதை நேரடியாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் அவர்களை உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றவைக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய்யின் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது.

எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் ரசிகர்களும் முழு மூச்சுடன் பிரசாரம் செய்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN assembly: சிறப்பு சட்டசபை கூட்டத்தில் இருந்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு