‘விடுதலை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

வெற்றிமாறன் – சூரி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘விடுதலை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அசுரன் பட வெற்றியை அடுத்து ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல், சூரி நாயகனாக நடிக்கும் படம், அதை அடுத்து மீண்டும் தனுஷ் உடன் கூட்டணி என பிஸியாகியுள்ளார். இதனிடையே நடிகர் விஜய்க்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதில் முதலாவதாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இந்தப் படத்துக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியிருந்தார் சூரி. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அசுரன் என்ற திரைப்படமாக்கிய வெற்றிமாறன் மீண்டும் ஒரு சிறுகதையை மையப்படுத்தித் தான் சூரியின் படத்தையும் இயக்குகிறார்.

கோ, கவண் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் சூரி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். சத்தியமங்கலம் காடுகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா அதிகம் குளிரான இடங்களில் ஷூட்டிங் நடைபெறுவதால் படத்திலிருந்து விலகினார். அதையடுத்து அந்தக் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தின் இசைக்காக முதல்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.