கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு அக்.20 முதல் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு அக்.20 முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 23-ம் தேதியன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு முதலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு எதிரொலியாக சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 1,141 காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் 2,015 தேர்வர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக 1,942 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.20-ம் தேதி முதல் நவ.6-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் தேர்வாணைய இணைய தளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.